ரமணிச்சந்திரன் ஆகிய நான்

அன்பான வாசகப்பெருமக்களே, என் குடும்பம், பிறப்பு, வளர்ப்பு பற்றி, என் எண்ணங்கள் கருத்துக்கள் பற்றிப் பத்திரிகைகள் வாயிலாக உங்களுக்கு சில பல விவரங்களைத் தெரிவித்திருக்கிறேன். ஒவ்வொரு பத்தரிகையில் ஓரோர் விவரம் இருக்கும்.

இதோ அதில் விட்டுப்போன சிலதோடு இன்னும் மொத்தமாக எல்லாம் இதில் தருகிறேன். 

முதலில் என் பெற்றோரைப் பற்றி.

எல்லாரையும் போலவே, என் பெற்றோரிடம் பெரு மதிப்பு எனக்கு.

 என் தந்தை பெயர் கணேசன்.  என் தாயார் பெயர் கமலம். கமலம் என்றால், வெறும் கமலம் என்று என் தாத்தா பாட்டி, என் அம்மாவுக்குப பெயர் வைக்கவில்லை. கமலசுந்தர தேவி என்பது என் அம்மாவின் முழுப் பெயர்.  என் பெரியம்மாவின் பெயர் வாம சுந்தரதேவி. பெரியம்மா 'சுந்தரம்' என்று அழைக்கப்பட என் அம்மா 'கமலம்' ஆகிப் போனார்கள்.

அந்தக் காலத்திலேயே, பெயரைச் சுருக்கி அழைப்பது நடந்துதான் இருக்கிறது.   

அப்பா அந்தக் காலத்திலேயே சாதிப்பெயரை விட்டுவிட்டு 'கணேஷ்' என்றுதான் கையெழுத்திடுவார். அவர் அண்டக்காலத்து பி.ஏ. அவரது ஆங்கில அறிவு, நம்மைத் திகைக்க வைக்கும். ஆனால் வெண்ணிற நாலு முழ வேஷ்டியும், சிட்டை போட்ட  வெண் டவலுமாக நிற்கும்போது, ஆதை நம்புவது கடினம். எங்கேயாவது வெளியே செல்லும் போதும், காமராஜரைப் போல, அரைகைச் சட்டை தான்.

இத்தனைக்கும், ஒரு காலத்தில் வெள்ளைக்கார சிநேகிதர்களோடு, கோட்,  சூட், செயின் ஸ்மோகிங், குதிரை சவாரி என்று இருந்தவர்தான். திருச்செந்தூரில் டென்னிஸ் கிளப் வைத்து நடத்தி, விளையாடியவர்.  

உறுதியோடு இவைகளை விபட்டவரும் கூட.

என் தாய் மாமா எஸ். டி. ஆதித்தன் ஒரு சுதந்திரப் போராட்டத தியாகி. மாமா நேரடியாக சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்றால், என் பெற்றோர், அப்படிப்பட்ட  பல போரளிகளுக்கு, ஆங்கில அரசிடம் மாட்டிக் கொள்ளாமல் மறைந்து வாழ இடமும், அந்தக் காலக் கட்டத்தில் அவர்களது வயிறு வாடாமல் உணவும் கொடுத்து உதவி இருக்கிறார்கள்.  அந்தக் கால கட்டத்தில் என் பெற்றோர் வசித்த வீடு, நடுவே சுவர் வைத்து இரண்டாகப் பிரிக்கப்படிருந்த ஒரு பெரிய வீடு.  மேல் மாடி வரைப பிரிக்கப்பட்டிருக்கும். வீட்டின் ஒரு புறத்தில், குடும்பத்தினரான நாங்கள் வசிக்க, மறுபுறம் முழுவதும், விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஒதுக்கி விடப்பட்டிருந்தது. பெரிய கருவப்பானையில் சோறும், பெரிய குண்டான் நிறையக் குழம்பும், கொல்லைப்ப்புறம் வழியாக அங்கே போவதை நாங்கள் எல்லாருமே பார்த்திருக்கிறோம்.

Ramanichandran Life Story2