செடி, கொடி... காட்டுச் செடிகளில் கூடக் கழுவிவிட்ட மாதிரி, ஒரு பளபளப்பு. அங்கே போய்வந்து எழுதிய கதை ஒன்று உண்டு. 'என்ன என்ன ஆசைகளோ' என்பது கதையின் பெயர்.

அதே போல மும்பை பம்பாயாக இருந்தபோது, முதல் முதலாக அடுக்கு மாடி வீடுகளை அங்கே பார்த்துவிட்டு எழுதிய கதை லாவண்யா. இது போல என் கதைகளின் களங்களை, என் மனதைக் கவர்ந்த இடங்களைக் கொண்டு அமைக்கிறேன். அதை எழுதியபோது என் மகளே சின்னப் பெண். அவள் வளர்ந்து, மணமாகி, அவளுடைய பெண்ணுக்கு 'லாவண்யா' என்று பெயர் வைத்திருக்கிறாள். அந்தப் பெயர் அவளுக்கு மிகவும் பிடித்தமானதாம்.

நிஜ வாழ்வுச் சம்பவங்களை முடிந்த அளவு நான் தவிர்த்தாலும், என் கதாபாத்திரங்கள் எல்லாமே, நாம் அன்றாடம் கண்டு  பழகுகிறவர்களே.

அங்கங்கே செல்லும்போது கண்ணில் படும்போதே, சற்றுக் கவனித்தால், பலர் குணத்தையும் காட்டி விடுவார்கள்.

திருமணத்திற்குப் போனோம் என்றால், உண்மையான அன்புள்ளவர்கள், பெண் மாப்பிள்ளை, வீடியோவுக்கும், போட்டோவுக்கும் நன்றாக இருக்க வேண்டும் என்று, வேர்வை துடைத்துவிடுவார்கள். நெற்றியில் கண்டபடி பூசப்படும் திருநீரு குங்குமத்த்தைச் சீர் செய்வார்கள். தத்தம் ஜரிகை துணிமணிகளையும், நகைகளையும் காட்டி,  போஸ் கொடுக்க மாட்டார்கள். உதவுகிரமாதிரி வீடியோவுக்குக் காட்சி கொடுப்போரும் உண்டு. இன்னும், ஒரிருவரைப் பின்னே தள்ளுவதும், தலையே நீட்டி, கேமராவுக்கு முன்னே, தோற்றம் அளிப்பதும்,  கவனித்தால், கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்... குணநலன்களை (அப்படி ஒன்று இருந்தால்) விளக்குவதாகவும் இருக்கும். இன்னும், வீடியோவின் பிளாஷ் லைட் தங்கள் பக்கம் வரும்போது,  சிலர் அப்பாவி போல முகத்தை வைத்துக்கொள்வதைப் பார்க்கையில் சிரிப்பு வரும். கூடவே, நம் கதைக்கு வில்லியும் கிடைப்பாள். வில்லன்களும்தான்.

கதாநாயகன், நாயகியைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

ஒரு திருமண வீட்டுக்குப் போய் வந்தால், அடுத்தடுத்த  கதைகளுக்கான ஐந்தாறு வகை மனிதர்களை இனம் கண்டு வரலாம்.

முன்னெல்லாம் ஒரு குறிப்பிட்ட பேனாவைக் கொண்டுதான் எழுதுவேன். தங்கமும், வெள்ளியும் கலந்த நிறத்தில் இருக்கும். மை நிறப்பி, நிறப்பி, எழுதுவேன்.

ஆனால், சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னதாக, ஒரு நாள் கதை முடித்துக் கொடுப்பதாக ஒத்துக்கொண்டிருந்ததால், நிறையப் பக்கங்களை வேகமாக எழுத நேர்ந்தது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றிவிட்டேன். ஆனால், வலது கை நாடு விரலில், தசை நாணில், மீன் சக்தி போய்விட்டது. வ்விரலை அசைக்கவே முடியாதபடி வலி. பேனா பிடித்து எங்கே எழுதுவது?

Ramanichandran's Life Story6